சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார்
1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது.
வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.